பாதுகா பட்டாபிஷேகம்

Sri:

Srimathe Gopaladesika Mahadesikaya Nama:

Srimathe Raghuveera Mahadesikaya Nama:

Adiyen. Happy to share below  பாதுகா பட்டாபிஷேகம் !!! Adiyen’s heartfelt thanks to Sri. Sridhar Venkatachari Swamin, Detroit, MI, USA for this help.

மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தெய்வமே மனிதராக வந்து வாழ்ந்தும் காட்டியது. தர்மம் இருந்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். ராமர் வேறு, தர்மம் வேறு அல்ல. சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது ராமாயணம்தான்.

பகவானுடைய கல்யாண குணங்களை முதலில் பேசிய காவியம், ராமாயணம்தான். இவ்வளவு அற்புதங்களை உள்ளடக்கிய ஆதி காவியமான ராமாயணத்தில், மிக உயர்ந்த பாத்திரம், பரதர்.

ஒரு விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் பரதர். தவறே செய்யாமல், அனைவரிடமும் வேண்டாத பேச்சுக்களை வாங்கிக் கொண்டவர் அவர்.

ராமருக்கு பட்டாபிஷேகம் நின்று போய்விட்டது என்பதைக் கூட அறியாமல் பரதர் வரும் பொழுது, அவரைப் பார்த்து வசிஷ்டர், ‘ராஜ்யம் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்’என்றார்.

‘எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இந்தச் செய்தி எனக்குத் தெரியவே தெரியாதே’ என்றார் பரதர். உடனே கௌசல்யை, ‘உனக்குத் தெரியாது என்பதை என்னை நம்பச் சொல்கிறாயா?’ என கடுமையாகச் சொல்கிறாள்.

எல்லோரும் இப்படி சந்தேகப்பட காரணமாக இருந்தது மூன்றே மூன்று வார்த்தைகள் தான். மானம், அபிமானம், பஹுமானம். ராம பக்திதான் மற்றவர்கள் அனைவரையுமே பரதர் மேல் சந்தேகப்பட வைத்தது.

ராமரை தன்னோடு எப்படியாவது திரும்ப அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு பரதர் ராமரைத் தேடிக்கொண்டு காட்டிற்குள் வருகிறார். அவரது வருகையைப் பார்த்து முதலில் அவரைச் சந்தேகப்பட்டு அவரது மனம் புண்படும்படி பேசிய குகனிடம், ‘எம்பெருமானுக்கு வேண்டியவனாக இருக்கும் நீ, என்னைச் சந்தேகப்படக் கூடாது.

ராமருக்குத் தோழனாக இருக்கும் உனக்கே இவ்வளவு உணர்வுகள் இருக்கும் பொழுது, எனது தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் ராமர். அவரை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் வந்திருக்கிறேன்’ என்றார் பரதர்.

அடுத்து அவர் பரத்வாஜ ஆசிரமத்துக்குச் செல்ல, அங்கே பரத்வாஜரும் அவரைச் சந்தேகப்பட்டு, ‘ஏன்டாப்பா, எதுக்கு வந்திருக்கே? உனக்குதான் ராஜ்யம் கிடைச்சு போச்சே. நீ நல்லவனா இருக்கலாம். ஆனால், உன் வருகையைப் பார்த்து என் மனம் நிலை கொள்ளவில்லையே‘ என்கிறார். அதற்கு ‘எனக்கு துளி கூட சம்பந்தமே இல்லை. எங்கம்மா என்னிடம் கேட்காமலேயே இதெல்லாம் பண்ணிட்டா. ராமரை, திரும்பவும் அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்’ என்றார் சாந்தமாக.

அடுத்து லட்சுமணர், பரதர் வருவதைப் பார்த்துவிடுகிறார். சுர்ருன்னு கோபப்படும் லட்சுமணர் ராமரிடம், ‘இந்த ராஜ்யம் தனக்கே நிரந்தரமாய் இருக்கணும்னு கேட்கத்தான் பரதர் இங்கே வந்திருக்கிறார். நம்மைக் கொல்லணும்னுதான் அவர் வந்திருக்கிறார். நீங்கள் எனக்கு உத்தரவு கொடுங்கள்.

இதோ நான் பரதனைக் கொன்றுவிட்டு வருகிறேன்’ எனக் கொந்தளிக்கிறார். லட்சுமணரைப் பார்த்து ராமர், ‘பரதன் யார் தெரியுமா? தமையன் என்கிற வார்த்தையைக் கேட்டாலே பாசம் பொழிபவன் அவன். அவன் வேறு, நான் வேறு என்று கிடையாது. என்னிடத்தில் இருக்கும் பாசத்தால் ஈர்க்கப்பட்டு, ராஜ்யமே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்திருக்கிறான். எங்கேயாவது அப்பாவை மகன் கொல்லுவானா?’ எனக் கேட்கிறார்.

பரதர் ஏன் ராமரை சரணாகதி செய்தார் தெரியுமா? தன்னுடைய இயலாமையை எடுத்துச் சொல்லி, எம்பெருமானிடத்தில் நீயே சரண் என்று சொல்லி விடுவதுதான் சரணாகதி. ஒரு ஜீவனுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, ‘தான் சுதந்திரன்’ என்று நினைத்துக் கொள்வது.

அப்படிப்பட்ட சுதந்திரனாக தான் ஆகிவிடக் கூடாது. ராமரின் கட்டளைப்படியேதான் தன் வாழ்க்கை என்பது நடக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு சரணாகதி செய்தார் பரதர். அதற்கேற்ப பரதனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு தமது பாதுகைகளைக் கொடுத்து அதற்கு பட்டாபிஷேகம் செய்ய வைத்தார் ராமர்.

‘பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும். ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்." 

 ஸ்ரீமதே ஸ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நம: ஆசார்யன் திருவடிகளே சரணம்.